மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதா வழி செய்கிறது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது.
தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான வரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் அவற்றை 21 ஆக உயர்த்தப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மன நல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல் பால்சி, தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றில் இருந்து ஐந்து சதவிகிதமாக அதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கான அதிகார வரம்பும் அதிகரிக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக