சாதியை ஒழிப்பேன்... :- ஆணவக்கொலைக்கு பலியான உடுமலை சங்கர் மனைவி கௌசல்யா பேச்சு. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சாதியை ஒழிப்பேன்... :- ஆணவக்கொலைக்கு பலியான உடுமலை சங்கர் மனைவி கௌசல்யா பேச்சு.

குடும்ப அமைப்பில் உரிமை, சுதந்திரம், விருப்பம் என்று வரும்போது, பெண்கள் இரண்டாம்பட்சம் ஆகிறார்கள். ஆனால், 'குடும்பத்தின் கௌரவம்' என்ற சுமை முழுவதும் அவர்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது. குறிப்பாக, ஆதிக்க சாதியில் பிறந்த பெண்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்தாலோ, காதலித்தவரை திருமணம் செய்துகொண்டாலோ, ஆணவக்கொலையில் வந்து முடியுமளவுக்கு சம்பவங்கள் நடப்பதற்கு, அந்த அர்த்தமற்ற பாரமே காரணமாகிறது. அப்படி சாதிக்கு தன் வாழ்க்கையை பலிகொடுத்து நிற்பவர், கௌசல்யா.

கலப்புத் திருமணம் செய்துகொண்ட, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காதல் தம்பதி சங்கர்-கௌசல்யா, நடுரோட்டில், பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானதை தமிழகத்தின் மனசாட்சி மறக்காது. அதில் சங்கர் படுகொலை செய்யப்பட, கௌசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். சிகிச்சை முடிந்து சங்கர் வீட்டுக்குத் திரும்பியவர், 'என் கணவர் விட்டுச் சென்ற கடமைகளை, இந்தக் குடும்பத்தின் மகளாக இருந்து செய்வேன்' என்று துயரம் ததும்பிய குரலில்  சொன்னது நினைவை விட்டு அகலாதது.

தமிழகத்தையே உலுக்கிய அந்த ஆணவக் கொலை நடந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், 'இப்போது என்ன செய்கிறார் கௌசல்யா?' என்ற தேடலில், வெகுநாட்களுக்குப் பிறகு அவருடன் அலைபேசியில் பேசினோம். பேச்சில் முதிர்ச்சி, தன்னம்பிக்கை என மாறியிருந்தார். 'நல்லாயிருக்கீங்களா கௌசல்யா?' என்ற  ஒற்றைக் கேள்வியில் அடங்கியிருந்த கேள்விகளைப் புரிந்து கொண்டவராய், பேசத்தொடங்கினார்.

''சங்கர்தான் எனக்கு எல்லாம்னு முடிவெடுத்துதான். எவ்வளவோ சவால்களை சந்திச்சு ரெண்டு பேரும் ஒண்ணு
சேர்ந்தோம்.

நான் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். சங்கர் காலேஜுக்குப் போயிட்டு இருந்தான். காதலிச்ச நாட்களை விட ரொம்ப சந்தோஷமா போனது வாழ்க்கை. எங்கள வாழவைச்சுக் காட்டுற மாதிரி, கேம்பஸ் இன்டர்வியூல சங்கருக்கு வேலைகூட கிடைச்சிருந்தது. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு ரெண்டு பேரும் நம்பிக்கையோட இருந்தோம். அந்த நாட்களோட சந்தோஷத்தை வார்த்தையில சொல்லத் தெரியல... ஆசைப்பட்ட வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கப் போற திருப்தி அது.

கல்லூரி ஆண்டு விழாவுக்காக சங்கருக்கு ஒரு சட்டை வாங்க கடைக்குப் போனோம். கடையில இருந்து வெளியே வந்தப்போ.... இப்போ நினைச்சாலும் மனசும் உடம்பும் நடுங்குது. என் கண் முன்னாடியே சங்கரை துள்ளத் துடிக்க வெட்டினாங்க'' - பேச்சுத் தடுமாற, எச்சில் விழுங்கி சமாளித்துத் தொடர்ந்தார்.

''சங்கரை காப்பாத்தப்போன என்னையும் தலையில வெட்டுனாங்க. நான் 'காப்பாத்துங்க காப்பாதுங்க'னு அழுதப்போ, ரோட்டுல நின்னுட்டு இருந்தவங்க எல்லாருமே வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க. அவங்க உயிர் பயம் அவங்களுக்குன்னாலும், ஆளுக்கொரு கல்லை எடுத்தாவது வீசியிருக்கலாம். மொத்தத்துல, எந்தத் தடையும் இல்லாம எங்க ரெண்டு பேரையும் ரத்தச் சகதியில வீசிட்டு, சாவகாசமா கிளம்பினது அந்தக் கும்பல். சங்கருக்கு உயிர்போக, நான் தலையில் பலத்த காயத்தோட உயிர் பிழைக்கனு... அடுத்து நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே.

சிகிச்சைக்குப் பிறகு நான் சங்கர் வீட்டில் தங்கியிருந்தேன். சங்கரோடு எல்லாமே முடிஞ்சிட்டதா இருந்த எனக்கு, அந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்தவங்க எல்லாம் கொடுத்த ஆறுதலும் தன்னம்பிக்கையும்தான் என்னை மெல்ல அந்தச் சூழல்ல இருந்து வெளியே கொண்டுவந்தது. குறிப்பா, 'எவிடன்ஸ்' கதிர், கார்த்தி, கோயம்புத்தூர், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், இளங்கோவன் அண்ணன், கீதா அக்கா, முத்தமிழ் அக்கா உள்ளிட்ட பலர் எனக்கு மனபலம் தந்தாங்க, பண உதவி செஞ்சாங்க, கவுன்சிலிங் கொடுத்தாங்க. ப்ளஸ் டூ முடிச்சிருந்த என்னை டைப்ரைட்டிங் முடிக்கவெச்சு, அரசுப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. கீதா இளங்கோவன் அக்கா லேப் டாப் வாங்கித் தந்தாங்க.

இப்போ இடைநிலை உதவியாளரா ஒரு அரசு வேலையில் சேர்ந்திருக்கேன். 15 ஆயிரம் சம்பளம் வாங்குறேன். மாதம் ஒரு முறை சங்கர் வீட்டுக்குப் போவேன். சங்கர் தம்பிகள் விக்கி, குட்டிக்கு  என்னால முடிஞ்ச பண உதவி செய்வேன். ரெண்டு பேரும் தினமும் எங்கிட்ட போன்ல பேசிடுவாங்க. சங்கரோட அப்பாவும், 'சாப்பிட்டியாம்மா'னு போன் பேசுவார். இவங்கதான் என் குடும்பம். சில விடுமுறை நாட்களில் கீதா இளங்கோவன் வீட்டுக்குப் போவேன். 'எவிடன்ஸ்' கதிர், கார்த்தி, முத்தமிழ் அக்கானு எல்லோரும் கூடப் பிறந்தவங்க மாதிரி என்னை வழிநடத்திட்டு வர்றாங்க. இப்போ கரஸ்ல பி.எஸ்சி., ஐடி படிச்சிட்டு இருக்கேன். எம்.எஸ்.டபிள்யூ  முடிச்சிட்டு சமூக சேவையாளராகணும்.

நானே சம்பாதிச்சு, சமைச்சு, சாப்பிட்டுனு தனிமை கொல்லுற ஒரு வாழ்க்கை. எந்த ஊருல இருக்கேன்னு இப்பவும் சொல்ல பயமாதான் இருக்கு. ஏதோ பதுங்கு குழியில வாழுற மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்? மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு குத்தமா? கொலை செஞ்சவங்க, கொள்ளையடிக்கிறவங்க எல்லாம் தைரியமா, சுதந்திரமா, சந்தோஷமா வாழுற இந்த சமுதாயத்துல, சங்கருக்கும் எனக்கும் மட்டும் ஏன் இந்த தண்டனை? யாராச்சும் என்னைக் கண்டுபிடிச்சு இங்க வந்துருவாங்களா, ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துருமானு மனசு இன்னும் தவிச்சுட்டேதான் இருக்கு.

நிம்மதியா தூங்கக்கூட முடியல'' என்றவருக்கு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.

''அம்மாவோட அம்மா, சொந்தக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் இன்னும் போன் வந்துட்டேதான் இருக்கு. என்னை இந்த நிலைக்கு ஆளாக்குனதுக்கு அப்புறமும் எந்த முகத்தை வெச்சுட்டு அவங்களால எங்கிட்ட பேச முடியுதுனு தெரியல. நான் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவேன்.  சிலர் என்கிட்ட, 'பெத்தவங்கள வெறுக்காத, அவங்கக்கிட்ட பேசு'னு எல்லாம் அறிவுரை சொல்வாங்க. அவங்களுக்கு நான் எந்த பதிலும் சொல்றதில்ல. மனசுக்குள்ள குமுறினாலும் ஒரு காதுல வாங்கி மறு காதுல விட்டிருவேன்'' என்றவர், தன் எதிர்காலம் எதற்கானதாக இருக்க வேண்டும் என்கிற தெளிவுடனும் தீர்க்கத்துடனும் இருக்கிறார்.

''சங்கர் இல்லாத இந்த வாழ்க்கையில நான் எப்படி இருக்கேன்னு எனக்கே சில சமயம் ஆச்சர்யமா, விரக்தியா இருக்கும். ஆனா, நான் கடைசி வரைக்கும் ஆணவக் கொலைக்கு வாழும் சாட்சியா இருந்து, சம்பந்தப்பட்டவங்க மனசாட்சியை உறுத்திட்டே இருப்பேன். என்னை இப்படி நிர்கதியா நிறுத்தினது சாதிதான். அந்த சாதி ஒழியணும். அதுக்காகப் போராடுறவங்களோட சேர்ந்து போராடுவேன்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here