தமிழ் இணைய செய்திகள்
23/04/2017
*_✴கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தண்ணீர் தேடி அலையும் கால்நடைகள்_*
கோவில்பட்டி: கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் கால்நடைகள் தண்ணீர் தேடி பல கிமீ தொலைவு அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் பருவ மழைகள் பொய்த்து தண்ணீரின்றி மானாவாரி பயிர்கள் கருகின.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகளின் நிவாரண தொகை முழுமையாக சென்றடையவில்லை. இதனால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியானதோடு தாங்கள் வாங்கிய கடன்களையும் திரும்ப செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதனிடையே வறட்சி பாதிப்பு கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை.
கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வோர் கண்மாய், குளம், வரத்து கால்வாய்களில் நிரம்பியுள்ள தண்ணீரை பருக விடுவர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் பெரும்பாலான கண்மாய், குளங்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளன. நிலத்தடி நீரும் படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் போர்களிலும் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது.
கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமப்படும் நிலையில், கால்நடைகளும் குடிக்க தண்ணீரின்றி திண்டாடுகின்றன. கண்மாய், குளங்களை தேடி செல்லும் கால்நடைகள், அவை வறண்டு கிடப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றன. இதனால் பல கி.மீ. தொலைவுக்கு தண்ணீர் தேடியும் அலையும் அவலம் தொடர்கிறது.
ஒரு சில கிராமங்களில் அடிபம்புகளில் வரும் தண்ணீர்தான் கால்நடைகளின் தாகத்தை போக்கி வருகின்றன. அடிபம்புகளிலும் தண்ணீர் வருவது நின்று போனால் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம்தான் என்ற சூழல் காணப்படுகிறது. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, அதிகாரிகள் நேரடியாக சென்று நடவடிக்கை எடுப்பதில் முனைப்பு காட்டாமல் இருந்து வருகின்றனர்.எனவே கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் வட்டார கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிய கூட்டணியை உருவாக்கவே முழு அடைப்பு போராட்டம்:டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
புதிய கூட்டணியை உருவாக்கவே முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது என்றும், இதில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என்றும் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், ''விவசாயிகளின் பிரச்சனைக்காக என கூறிக்கொண்டு தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் ஏப்ரல் 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு கிடைக்காது. சுமார் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான வணிகம் பாதிக்கப்படும்.
மேலும் இந்தப் போராட்டம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணியை உருவாக்கும் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுகிறது. எனவே அவர்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது'' என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
http://www.sivakasiteacherkaruppasamymblogspot.com
*_✴கடல் காற்று வீசுவதை பொறுத்தே வெயிலின் தாக்கம் இருக்கும்: முன்னாள் இயக்குநர் ரமணன் பேட்டி_*
சென்னை: கடல் காற்று வீசுவதை பொறுத்தே வெயிலின் தன்மை இருக்கும் என வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெம்மையில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள மக்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். கத்திரி வெயில் என்று சொல்லக்கூடிய உச்சக்கட்ட வெயில் காலம் வரும் வருவதற்கு முன்னரே மக்கள் துவண்டு வருகின்றனர்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனிடம் பேசிய போது கடல் காற்று தாமதமாக வீசுகின்றன காலங்களில் வெம்மை அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார். கடந்த 2 ஆண்டுகளாக வெள்ளம், புயல் என தமிழகத்தை இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து ஆட்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு வானிலை இயல்பு நிலையில் இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது. வெயிலில் இருந்து காத்துக்கொள்ள வெள்ளை நிற பருத்தி ஆடைகளை அணியலாம் என்றும், மொட்டை மாடிகளுக்கு வெள்ளை நிறத்தை பூசலாம் என்று ரமணன் ஆலோசனை வழங்கினார்.
*_✴திருப்பாற்கடல் பாலாற்றில் மீன் பிடித்த போது அஷ்டபுஜ பைரவர் சிலை கண்டெடுப்பு_*
காவேரிப்பாக்கம்: திருப்பாற்கடல் பாலாற்றில் பொதுமக்கள் மீன் பிடித்தபோது, அஷ்டபுஜ பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பாலாற்று குட்டை தேங்கி உள்ள தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பைரவர் சிலையும், பைரவரின் வாகனமான நாய் சிலையையும் அங்கிருந்ததை கண்டு பரவசம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி பைரவர் சிலையை வழிபட்டனர்.வாலாஜா தாசில்தார் பிரியா, வேலூர் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம், விஏஓ ரஞ்சித்குமார் ஆகியோர் சிலைகளை பார்வையிட்டனர்.
அப்போது, காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், `இந்த சிலை அஷ்டபுஜ பைரவர் சிலையாகும். சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலையாக இருக்கலாம். பைரவர் சிலை 5 அடி உயரமும் 8 கைகளும் உள்ளது. நாய் சிலை 2 அடி உயரமும் உள்ளது. இந்த சிலைகள் கருப்பு மாவு கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், இடது பக்க கையின் கீழ் பகுதியிலும், பைரவரின் வாகனமான நாய் சிலையின் வால் பகுதியும் சேதமடைந்துள்ளது. பொதுவாக சேதமடைந்த சிலைகளை கோயில்களில் வைத்து வழிபடமாட்டார்கள். எனவே, சேதமடைந்த இந்த சிலைகளை யாரோ ஆற்றில் வீசிவிட்டு சென்று இருக்கலாம்’ என்றார்.
*_✴ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீதிபதி கேட்வில்லை: ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் பேட்டி_*
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுரையில் பேட்டியளித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரிடம் குறைகளை விசாரணை கமிஷன் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விசாரணை கமிஷன் நீதிபதி மதுரைக்கு வரவில்லை என முகிலன் குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதி ராஜேஸ்வரன் முறையாக நடத்தவி்ல்லை என புகார் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீதிபதி கேட்வில்லை. விசாரணை நீதிபதி மதுரை, கோவை என எங்கும் செல்லவில்லை என முகிலன் பேட்டியளித்துள்ளார்.
முழுமையான விசாரணை நடத்தாமலேயே விசாரணை கமிஷன் ஆயுட்காலம் முடிகிறது. விசாரணை கமிஷனின் ஆயுட்காலத்தை நீட்டித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என முகிலன் கோரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் பேட்டியளித்துள்ளனர்.
*_✴எஸ்பி விக்ரமன் தலைமையில் குளத்தை தூர்வாரிய நெல்லை போலீசார்_*
தாழையூத்து: நெல்லை அருகே காவல் துறையினர் சீமைக்கருவேல மரங்களை அகற்றி குளத்தை தூர்வாரினர். இனி வாரந்தோறும் நீர்நிலை பராமரிப்பு பணியில் ஈடுபடப்போவதாக, மாவட்ட எஸ்பி கூறினார். வறட்சி தலைவிரித்தாடும் இந்த காலக்கட்டத்தில் கால்வாய், குளங்கள், நீர்நிலைகளை தூர்வார தகுந்த நேரமாகும். ஆனால், இதை தவறவிட்டு பருவ காலத்தில் கால்வாயில் தண்ணீர் வரும்போது அவசர, அவசரமாக வேலை செய்து நிதியை செலவழிப்பது பொதுப்பணித்துறையினரின் வழக்கமாகிவிட்டது.
விவசாயம் பொய்த்துப்போய் விவசாயிகள் தற்கொலை செய்துவரும் நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதுபோல் பல்வேறு துறையினரும் நீராதார மேம்பாட்டு சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி விக்ரமனும், குளங்களை தூர்வாரும் பணியில் மாவட்ட காவல்துறையினரை ஈடுபடுத்த தீர்மானித்தார்.
இதற்கு போலீசாரும் ஆதரவு தெரிவித்ததால் முதற்கட்டமாக தாழையூத்து அருகில் உள்ள வண்ணாம்பச்சேரி குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை சீரமைத்து ஆழப்படுத்தும் பணியில் இறங்கினர். இந்த பணியை எஸ்பி விக்ரமன் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வண்ணாம்பச்சேரி குளத்தில் ஆயுதப்படை காவலர்கள், தாழையூத்து, கங்கைகொண்டான், மானூர், சிவந்திபட்டி, நெல்லை தாலுகா காவல் நிலையங்களை சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் எஸ்பி விக்ரமன் கூறுகையில், ‘பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு இடையில் நல்லுறவை வளர்க்கும் விதமாகவும், நீராதாரத்திற்கு கேடாக உள்ள கருவேல மரங்களை அகற்றும் வகையிலும் இந்த பணி செய்யப்படுகிறது, தொடர்ச்சியாக வார இறுதி நாட்களில் காவலர்கள் கருவேல மரங்களை அகற்றும் பணியை செய்வார்கள். குளங்களும் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்படும்.’ என்றார்.
தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு, இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார், ஆவுடையப்பன், ராபின்சன் மற்றும் ஏராளமான போலீசார் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴கடும் வறட்சி எதிரொலி திற்பரப்பு அருவி வறண்டது_*
குலசேகரம்: கடும் வறட்சியால் திற்பரப்பு அருவி வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவது திற்பரப்பு அருவி. குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிவரும் வற்றாத கோதையாறு அருவியாக விழுவதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.
இதனால் குறிப்பிட்ட சீசன் என்றில்லாமல் எப்பொழுதும் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா மையமாக திகழ்ந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் குமரி மாவட்டம் கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளது. இதனால் திற்பரப்பு அருவியும் தண்ணீரின்றி வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது. தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் மக்கள் வெப்பத்தை தணிக்க நீர்நிலை சார்ந்த சுற்றுலா மையங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சிற்றார் 2 அணையில் அவசரகால மதகுகள் பராமரிப்பு பணி நடைபெற்றதால் அந்த மதகு வழியாக தண்ணீர் வெளியேறி கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டி வந்தது. இதனால் கடும் வறட்சியிலும் கடந்த ஒரு மாத காலம் பயணிகள் நீராடி மகிழ்ந்தனர். தற்போது அங்கு பணிகள் நிறைவு பெற்று மதகுகள் அடைக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தினால் அருவியில் நீராடி மகிழ வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. பயணிகள் ேவறு வழியில்லாமல் அருவியின் கீழ் பகுதியிலுள்ள நீச்சல் குளத்தில் நீராடி செல்கின்றனர். இதே போன்று அருவியின் மேல் பகுதியிலுள்ள திற்பரப்பு தடுப்பு அணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் ஆர்வத்துடன் படகுகளை ஓட்டி சென்று கோதையாற்றின் இரு பக்கங்களிலிலுள்ள பசுமை வாய்ந்த சோலைவனத்தை ரசித்து செல்கின்றனர்.
நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருவதாலும், மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதாலும் கோடையில் களைகட்ட வேண்டிய சுற்றுலா சீசன் இந்த ஆண்டு பெரும் பாதிப்பாக அமையும் சூழல் உள்ளது.
*_✴✴பழநி அருகே 17ம் நூற்றாண்டு வீரக்கல் சிற்பம் கண்டெடுப்பு_*
பழநி: பழநி அருகே 17ம் நூற்றாண்டு வீரக்கல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கணக்கன்பட்டி பஸ் நிறுத்த பொதுச்சாவடியில் 2 வீரர்கள் நின்றபடி இருக்கும் 17ம் நூற்றாண்டு வீரக்கல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பழநி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் கூறியதாவது: சிலையில் 2 வீரர்கள் கைகூப்பியபடியும், இடது கையில் ஒரு வாளை வைத்துக் கொண்டும், இடுப்பின் வலதுபுறம் மற்றொரு வாளை சொருகிய நிலையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் தலை அலங்காரம், பக்கவாட்டு கொண்டை, காதணிகள் தோள்பட்டையை தொட்டவாறு இருக்கும்படி செதுக்கப்பட்டுள்ளது. மேலும், சேதமின்றி முழுமையான நிலையில் உள்ளது. சிற்பம் கிபி 17ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். இதற்கான பல்வேறு சான்றுகள் அச்சிற்பத்தில் உள்ளன.
மன்னர்கள் ஆட்சிகாலத்தில் இப்பகுதியில் நடந்த போரில், வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக இந்த வீரக்கல் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியங்களில் கூட வீரக்கல் சிற்பம் குறித்த பல்வேறு குறிப்புகள் உள்ளன. மேலும், பொதுமக்கள் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தோடும், நமது பண்பாடு மற்றும் வரலாற்றை அடுத்து வரும் சந்ததிகளுக்கு விளக்கும் வகையிலும் இத்தகைய சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கணக்கன்பட்டியில் உள்ள வீரக்கல் சிற்பத்தை பழநி அருங்காட்சியத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக