5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: மாநிலங்கள் கையில்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: மாநிலங்கள் கையில்!


5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் விருப்பத்துக்குட்பட்டது என்று நேற்று ஜூலை 27ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி-யின் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்துள்ளார்.

கனிமொழி எம்.பி. 27ஆம் தேதி கேள்வி நேரத்தில், “மத்திய அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது பற்றி அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே டிராப் அவுட் எனப்படும் கல்வியில் இடை நிறுத்த விகிதம் என்பது கிராமப்புற கல்வித்துறையில் பெரும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது பள்ளிகளில் இடை நிறுத்தம் செய்யும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் கிராமப்புறங்களில் குறிப்பாக மாணவிகளை அரசின் இந்த முடிவு கடுமையாகப் பாதிக்கும். 5ஆம் வகுப்பு அல்லது 8ஆம் வகுப்பில் பெண் பிள்ளைகள் தேர்ச்சி பெறவில்லை என்றால் இதையே சாக்காக வைத்து பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்திவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, தேசம் முழுவதும் இருக்கும் கிராமப்புறக் குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்வியை மனதில்கொண்டு அரசின் இந்த முடிவினை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று வலியுறுத்தினார்,

இதற்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மத்திய அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற முடிவு எடுத்திருந்தாலும் இது மாநிலங்களின் விருப்பத்துக்குட்பட்டதே. மாநிலங்கள் விருப்பப்பட்டால் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வினை நடத்தலாம். இப்போது இருக்கும் முறையை தொடர விரும்பும் மாநிலங்கள் தொடரலாம். அதேநேரம் 24 மாநிலங்கள் பொதுத் தேர்வுக்கு விருப்பம் தெரிவித்துள்ளன. பள்ளி ஆரம்ப வகுப்புகளில் இருந்தே குறைந்தபட்ச போட்டித் தேர்வுகள் தேவைப்படுகின்றன. அதன்மூலம் மாணவர்களின் கல்வித் திறனை வளர்க்க அரசு விரும்புகிறது’’ என்றார் பிரகாஷ் ஜவடேகர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here