நவாஸ் ஷெரீப் ராஜினாமா : ஒரு வரலாற்று வெற்றி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நவாஸ் ஷெரீப் ராஜினாமா : ஒரு வரலாற்று வெற்றி!


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று ஜூலை 28ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்ததுள்ளது.

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்திருந்தனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அதையடுத்து, நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள பனாமா கேட் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தியது. அதில், நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததையடுத்து, அனைவரிடமும் விசாரணை முடிந்தது.

இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையைக் கடந்த ஜூலை 10ஆம் தேதி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. பனாமா கேட் ஊழல் தொடர்பாக நவாஸ் ஷெரீப், அவரது குடும்பத்தினர் மீது விசாரணை கடந்த ஜூலை 21-ம் தேதியுடன் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த வழக்கில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று ஜூலை 28ஆம் தேதி பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவரின் ராஜினாமாவிற்கு பின், பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கருத்து தெரிவித்துள்ளது.

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபுக்கு தொடர்பிருப்பதாக தொடர்ந்து குரல் கொடுத்து அதனை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்ற இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கு பாகிஸ்தானின் பிற கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன.பனாமா பேப்பர்ஸ் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். பாகிஸ்தானில் அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது நல்லது. உண்மைக்கும் நீதிக்கும் வெற்றி கிடைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளது.

தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் துணைத் தலைவர் ஷா மெக்மூத், “இது ஒரு வரலாற்று வெற்றி. இந்த வெற்றி பாகிஸ்தானை மேலும் வலுப்படுத்தும். இனி நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை அகற்றுவோம். ஆயுதப் படையினர், போலீஸார், சட்ட அமலாக்க துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோன் “என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் சமான் கைரா கூறுகையில்,”நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்பாராதது. அனைத்து எதிர் கட்சிகளும் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் வரை கொண்டுச் சென்று போராடிய இம்ரான் கானின் கட்சிகே இந்த வெற்றி சேரும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, லாகூர், கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் ராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here