காவலர் பணி: இரண்டாம் நிலை தகுதி தேர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காவலர் பணி: இரண்டாம் நிலை தகுதி தேர்வு!

தமிழகம் முழுவதும் காவல்துறையினர், தீயணைப்பு படையினர், சிறை காவலர்கள் 
உள்ளிட்ட பணியிடங்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு நேற்று (ஜூலை 27ஆம் தேதி) தொடங்கியது. ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1,838 ஆண்கள், 835 பெண்கள் என மொத்தம் 2,673 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு உடல் எடை, ஓட்டப் பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் 900 பேர் கலந்து கொண்டனர். இந்த உடல் தகுதி தேர்வு தொடர்ந்து 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது முடிந்த பின்னர் உடல் திறன் போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடக்கிறது.

இதுபோன்று, திருச்சியில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (ஜூலை 27ஆம் தேதி) தொடங்கிய காவலர் பணிக்கான ஆள் தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 804 பேர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தேதிகளில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

மேலும் தூத்துக்குடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2,981 ஆண்களும், 1,021 பெண்களும் கலந்து கொள்கின்றனர். இந்தத் தேர்வு முதல் மூன்று நாள்கள் ஆண்களுக்கும், நான்காவது நாள் பெண்களுக்கும் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேர்வில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 612 பெண்கள் உள்பட 3,566 பேர் பங்கேற்கவுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் முதல் நாள் காவலர் தேர்வில், 1,000 இளைஞர்கள் கலந்துகொண்டனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 7,247 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இது ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை நடைபெறும்.

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,000 பேருக்கு, முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. ஆகஸ்ட் 2ஆம் தேதிவரை நடைபெறும் காவலர் தேர்வில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

விருதுநகரில் ஆகஸ்ட் 4ஆம் தேதிவரை நடைபெறும் காவலர் தேர்வில் 2,787 ஆண்களும், 1,261 பெண்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஜூலை 31ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பெண்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here