இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.3 சதவிகிதமாக உள்ளது.
2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஜனவரி - மார்ச்சில் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் அதற்கு முந்தைய காலாண்டைவிட 0.7 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து தனது ஆய்வறிக்கையில் 0.4 சதவிகித பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது. ஆனால், கணிப்பைவிடக் குறைவான வளர்ச்சியே கிட்டியுள்ளது.
இதுபோல காலாண்டு வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளதால் நாட்டின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 1.9 சதவிகிதத்தை விடக் குறைந்து விடும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் காலாண்டு வளர்ச்சியில் சேவைகள் துறை (0.5%) முக்கியப் பங்காற்றியுள்ளது. மேலும், சில்லறை வர்த்தகத் துறையிலும் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இதுபற்றி மூத்த பொருளாதார நிபுணரான சாம் ஹில் கூறுகையில், “சில்லறை வர்த்தகம், ஹோட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சேவைகள் துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இதனால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கவில்லை” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக