அமெரிக்காவில் சீனா நடத்திவரும் வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கி அழிக்கும் ஏவுகணை மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை வைத்திருப்பதால், அமெரிக்க அரசுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்துவரும் வட கொரியா அரசைக் கண்டிக்கும்படி கடந்த மாதம் சீன அரசிடம், அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஆனால், வட கொரியா அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சீனாவின் நடவடிக்கை, அமெரிக்க அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதையடுத்து, சீனாவை மிரட்டும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறி சீனா நடத்திவரும் வர்த்தக முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமைகளைப் பிற நாடுகள் திருடி பயன்படுத்துவதால் அமெரிக்காவில் ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான கோடி டாலர்கள் அளவுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுவதால், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையைத் திருடி, சீனா செய்துவரும் வர்த்தக முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை செய்யும்படி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு, சீன வர்த்தகத்துறை அமைச்சகம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ‘இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் சீனா கைகட்டிக்கொண்டு மவுனமாக இருக்காது. எங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக