கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் இந்திய நாட்டின் ஒரு மாநிலமான திரிபுரா மாநில முதல்வரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப முடியாது என்று தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில முதல்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கள் மாநில மக்களுக்கு உரையாற்றலாம். இது அந்தந்த மாநில மொழியில் தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ மூலம் ஒளி, ஒலிபரப்பப்படும்.
திரிபுரா மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணிக் சர்க்கார் பதவி வகித்து வருகிறார். அம்மாநில மக்களுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மாணிக் சர்க்கார் ஆற்றிய உரையை தூர்தர்ஷனும், ஆல் இந்தியா ரேடியோவும் ஆகஸ்ட் 12ஆம் தேதி பதிவு செய்து கொண்டன.
இந்த நிலையில் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 7 மணிக்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு நிறுவனமான பிரசார் பாரதி அலுவலகத்திலிருந்து திரிபுரா மாநில முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், ‘தங்களின் உரை பிரசார் பாரதி உயரதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. ஒளிபரப்பு விதிமுறைகளுக்கு முரணான அம்சங்கள் அதில் இடம்பெற்றிருப்பதால் முதல்வரின் உரையை ஒளி, ஒலிபரப்ப முடியாது. உரையை மாற்றி அமைத்தால் ஒளி, ஒலிபரப்புவோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் கடுமையான கோபம் அடைந்த முதல்வர் மாணிக் சர்க்கார், “என் உரையில் ஒரு வார்த்தையைக்கூட மாற்ற முடியாது’’ என்று பதில் அனுப்பினார்.
இந்த நிலையில் முதல்வரின் சுதந்திர தின உரை ஒளிபரப்பப்படவில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி என்பது பாஜக ஆர்.எஸ்.எஸ்ஸின் சொத்தா? கூட்டாட்சி பற்றி பிரதமர் மோடி முழங்கி வரும் நிலையில், ஒரு மாநில முதல்வரின் உரையை ஒளிபரப்ப மறுப்பது வெட்கக்கேடான செயல். தனக்கு எதிரானவர்களின் குரல்களை ஒடுக்குவதற்கு மோடி உத்தரவிட்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரின் குரலைக் கூட ஒடுக்கும் நிலை என்பது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக இருக்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் யெச்சூரி.
தமிழக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதுபற்றிக் கருத்து தெரிவிக்கையில், “திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், ஊழல் முறைகேடுகளற்ற முதல்வராக நற்பெயர் பெற்றவர். சிறந்த நிர்வாகம் கொண்ட முன்னுதாரண மாநிலமாக திரிபுரா அமைந்துள்ளது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கப்பட்ட வடகிழக்கு மாநிலம் திரிபுரா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அத்தகைய முதலமைச்சரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப தூர்தர்சன் மறுத்துள்ளது. தங்களின் தனியார் சொத்து போல அரசு நிறுவனங்களை நடத்துவது அற்ப அரசியல்.
ஆர்.எஸ்.எஸ். பாஜக அமைப்புகளின் இந்த எதேச்சார நடவடிக்கை, அறிவிக்கப்படாத அவசரநிலையாகும் - வன்மையான கண்டனங்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.
திரிபுரா மாநில முதல்வருக்கே இந்த கதி என்றால், நாம் நேற்று சுதந்திர தினம் கொண்டாடியதன் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மோகன் பகவத் தேசிய கொடியேற்ற தடை விதிக்கப்பட்டதாக உரத்து முழங்கும் காட்சி ஊடகங்கள், ஒரு மாநில முதல்வரின் உரையே தூர்தர்ஷனால் ஒளிபரப்பப்பட மறுத்தது பற்றி முனகக்கூட மறுக்கின்றன.
இதுதான் அந்தப் புதிய இந்தியாவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக