தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்தது, மருத்துவக் கல்வி என்றால் என்ன என்பதன் அடிப்படையே தெரியாமல் செய்த வரலாற்றுத் தவறு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்திவந்தது. நீட் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், இந்தியாவில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. இதனால், தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசிவந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று (ஆகஸ்ட் 22) கிருஷ்ணாசாமி வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வின் அடிப்படையில் மட்டும்தான் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும், தமிழக அரசால் விதிவிலக்கு பெற முடியாது என்பதைக் கடந்த சில மாதங்களாகவே நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். இருந்தாலும், தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள், ஏதோ தாங்கள்தான் தமிழ் மாணவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் நாட்டுக்கும் பாடுபடுவதாக மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு, இந்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த எதிர்ப்புகளின் அடிப்படையில் மாநில அரசு வேறு வழியில்லாமல், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தியது என்று குறிப்பிட்டுள்ள கிருஷ்ணசாமி, “தமிழக அரசியல் கட்சிகள் மருத்துவக் கல்வி என்பதனுடைய அடிப்படையே தெரியாமல் செய்த வரலாற்றுத் தவறு இது. இப்பொழுது உச்ச நீதிமன்றம் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெளிவுபடுத்திவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அவர் நீட் தேர்வை வரவேற்றதற்கான காரணம் பற்றி குறிப்பிடுகையில், “நம்முடைய தமிழக மாணவர்களுடைய கல்வித் தரத்தை இந்தத் தேர்வை அடிப்படையாக வைத்தாவது உயர்த்தட்டும்" என்ற நோக்கத்தோடு வலியுறுத்தியதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக