நம்பிக்கை வாக்கெடுப்பு, குதிரை பேரம், எம்.எல்.ஏ-க்களைச் சொகுசு ஹோட்டலில் தங்கவைத்தல் என்று தமிழ்நாடு அரசியல் மீண்டும் ஆகஸ்ட்டில் ஒரு பிப்ரவரியை வருவித்திருக்கிறது.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகள் இணைந்ததும் மறுநாளான ஆகஸ்ட் 22ஆம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு வாபஸ் என்று கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து அவர்கள் புதுச்சேரி அரியாங்குப்பம் அருகேயுள்ள ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்க வேண்டும்” என்று பகிரங்கமாக அறிவித்தார். திவாகரன் அறிவிப்பு செய்து பல மணி நேரம் ஆகியும் அது பரபரப்பு செய்தியாக பேசப்பட்டும், சபாநாயகர் தனபாலிடம் இருந்து அதுபற்றி மறுப்புச் செய்தி ஏதும் வரவில்லை. தனபாலிடம் இருந்து மறுப்பு ஏதும் வராததால் எடப்பாடி தரப்பில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
ஆடிட்டருடன் ஆலோசனை!
நேற்று காலை ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சந்திப்பு என்றால்... மதியம் அடுத்த அதிரடியை ஆரம்பித்தார் தினகரன். “சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு பொதுக்குழுவைக் கூட்டுவோம்” என்று அறிவித்த கட்சியின் அமைப்புச் செயலாளரும் தஞ்சை மாவட்டச் செயலாளருமான வைத்திலிங்கத்தை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். உடனே தஞ்சையில் தினகரனுக்கும் ஆதரவாளர்களுக்கும் வைத்திலிங்கத்துக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில், தன்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்றும், தினகரன் ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவித்திருக்கிறார் வைத்திலிங்கம்.
ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்திவந்த நிலையில் வைத்திலிங்கமும் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வருகின்றன. இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் விசாரிக்கையில்...
“தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் என்ற முறையில் வைத்திலிங்கத்தை அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தே நீக்கியிருக்கிறார். இது ஆரம்பம்தான். அடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக முதன்மை செயலாளராகவும் சேலம் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். இந்தப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கவும் முடிவெடுத்த தினகரன் இதுபற்றி ஆலோசித்தார். மேலும், எடப்பாடியை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு தன் அணிக்கு இப்போது வந்துள்ள செம்மலையை நியமிக்க முடிவு செய்திருக்கிறார் தினகரன். இதோடு அமைச்சர்கள் வேலுமணி, காமராஜ் ஆகியோரின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட இருக்கின்றன.
இதுபற்றி தகவல் தெரிந்துதான் வைத்திலிங்கம் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை செய்திருக்கிறார். ‘தினகரன் துணைப் பொதுச் செயலாளர் என்ற பெயரில்தான் இதையெல்லாம் நடத்துகிறார். சீக்கிரம் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சொல்லி சசிகலா பொதுச் செயலாளரும் அல்ல, தினகரன் துணைப் பொதுச் செயலாளரும் அல்ல என்று அறிவிக்கச் செய்யுங்கள். அப்போதுதான் தினகரனின் நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என்று கேட்டிருக்கிறாராம். சசிகலாவை நீக்கச் சொன்ன வைத்திலிங்கத்தை நீக்கிய தினகரனின் உத்தரவு டெல்லி வரை எதிரொலித்திருக்கிறது. தோண்டப்படும் வழக்குகள்!
இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே இருக்கும் புகார்கள், வழக்குகள் பற்றிய ஃபைலை கேட்டிருக்கிறாராம் முதல்வர். முடிந்தவரை அவர்கள் மீதான பழைய வழக்குகளை தூசி தட்டினால், அவர்களின் தினகரனுக்கு ஆதரவான செயல்பாடுகளில் இருந்து திசை திருப்பலாம் என்று திட்டம் தீட்டி அதில் இறங்கியுள்ளனர் போலீஸார். விரைவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீதான பழைய வழக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டு என்கிறார்கள் உளவுத்துறையினர்.
தினகரனின் இன்னொரு முகம்!
’’துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அமைதியே உருவானவர். ஆனால், அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அதை விரைவில் பார்ப்பீர்கள். அதன் முதல்கட்டம்தான் ஆளுநர் மாளிகையில் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். விரைவில் இன்னும் பலமுகங்களைப் பார்ப்பீகள். நேற்று வரை ஊழல் அரசுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்த ஓ.பன்னீருக்கு இப்போது துணை முதலமைச்சர் என்றால் உங்களுக்காக வாக்களித்த 30 தலித் எம்.எல்.ஏ-க்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என்கிறார் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி.
‘இணை’ முதல்வர் ஓ.பன்னீர்!
ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் என்று பதவி ஏற்றுக் கொண்டாலும் அவரது செயல்பாடுகள் எல்லாமே முதல்வருக்கு இணையானவர் போல, அதாவது இணை முதல்வர் போலவே இருக்கிறது. பன்னீர் கோட்டைக்கு வந்தவுடன் கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் செயலாளர்களும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்கு இணையான பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற மேலிட உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி செயல்படுத்தியிருக்கிறார். எனவே, ஓ.பன்னீரின் கிரீன்வேஸ் சாலை ரோடு அவர் ஏற்கெனவே முதல்வர் பதவி வகித்தபோது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.
புதுச்சேரி ஹோட்டல்
அரியாங்குப்பம் ரிசார்ட்டில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று இரவு தினகரன் அங்கே செல்வதாக தகவல்கள் கசிந்தன. அதேநேரம் இன்று தினகரன் பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. புதுச்சேரி ஹோட்டலில் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கான ஏற்பாடுகளை தங்க தமிழ்செல்வன் செய்துகொண்டிருக்கிறார். விரைவில் அங்கே இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் வரலாம் என்கிறார்கள். குறிப்பாக அனைத்து ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் மீதும் தினகரன் தரப்பு தனி கவனம் எடுத்து உழைத்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக