அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில், ‘ஊழியர்களைப் பாதிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மாநில அரசின் எட்டாவது ஊதியக்குழு மாற்றங்களை, உடனடியாக கொண்டுவர வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். வங்கிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜி.எஸ்.டி என்ற முறையில் சேவை வரி வசூலிக்கக் கூடாது, பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் காரணமாக ஜாக்டோ-ஜியோ இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, இன்று (ஆகஸ்ட், 22) லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பள்ளிகளில் வகுப்பு நடைபெறுவதிலும் அரசு அலுவலகங்களில் நிர்வாகப் பணிகள் செயல்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் இன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் உள்ளதால் பகுதி நேர ஆசிரியர்கள், பணிக்கு வந்து, பாடம் நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் இன்று கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். வேலை நிறுத்த நாளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும். பணி நிரந்தரம் செய்யும் போது போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதால் அங்கு அதிகாரிகளே பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்த சுற்றறிக்கையில், ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நடத்தை விதிகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களும், காலமுறை ஊதியம் பெறுபவர்களும் அன்று பணிக்கு வராவிட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
போராட்டத்தில் பங்கு பெறாமல் பணிக்கு வருபவர்கள் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
விரைவில் ஜாக்டோ-ஜியோ தலைவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும். இல்லை என்றால் திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் தலைவருமான கணேசன், அதன் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று (ஆகஸ்ட்,21) தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக