இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ... முன்னாள் துணை குடியரசு தலைவர் அன்சாரி அதிரடி குற்றச்சாட்டு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை ... முன்னாள் துணை குடியரசு தலைவர் அன்சாரி அதிரடி குற்றச்சாட்டு!


Mayura Akilan Oneindia Tamil டெல்லி: இந்திய முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை உள்ளது என்று கூறிய முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் புகலிடம் தேடுவதற்காக கூறிய கருத்து என அந்தக் கட்சி கூறியது. துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் டெல்லி ராஜ்யசபா டி.வி.க்கு ஹமீது அன்சாரி சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒருவித அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாதுகாப்பு உணர்வின்மை இஸ்லாமியர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமூக மதிப்பீடுகள், தார்மீக உணர்வு அனைத்து இடங்களிலும் வீழ்ந்து வருகிறது.


நமது தேசபக்தி என்பது அனைத்து நேரத்திலும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. இந்தியாவில் பெருகிவரும் சகிப்புத்தன்மையின்மை குறித்து பிரதமர் மோடியிடம் கேட்டேன். ஆனால் அவர் கூறிய பதிலை வெளிப்படையாக கூறுவது ஜனநாயக மரபுக்கு எதிரானது. 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று என்று கூறினார். இந்தியா பன்முகத்தன்மை  கொண்ட சமூகமாக கடந்த 70 ஆண்டுகளாக மட்டும் இல்லை. பல நூற்றாண்டுகளாகவே, அப்படித்தான் இருக்கிறது. தற்போதைய சூழல், அனைவரோடும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் நேற்று டெல்லி ராஜ்யசபாவில் நடந்த பிரிவு உபசாரத்திலும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.

அப்போது அவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டி பேசினார். அரசின் கொள்கைகளை எதிர்க்கட்சி குழுக்கள் நியாயமாக, சுதந்திரமாக, வெளிப்படையாக விமர்சிக்க அனுமதிக்காவிட்டால், அது ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக சிதைத்தது போலாகி விடும் என குறிப்பிட்டார். மேலும் சிறுபான்மையினருக்கு அளிக்கிற பாதுகாப்பின் மூலம் ஜனநாயகம் சிறப்பு பெறுகிறது. அதே நேரத்தில் சிறுபான்மையினருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஹமீது அன்சாரியின் கருத்துகளுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா, கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய உயர் பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து இப்படிப்பட்ட சிறிய கருத்துகளை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இன்னும் துணை ஜனாதிபதிதான். இத்தகைய கருத்துக்கள் அவரது உயர்பதவிக்கு கண்ணியம் சேர்ப்பதாக இல்லை. அவர் ஓய்வுக்கு பின்னர் அரசியல் புகலிடம் தேடுவதற்காகத்தான் இத்தகைய கருத்துக்களை கூறியதாக தெரிகிறது என்று தெரிவித்தார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here