கார்டூனிஸ்ட் பாலாவின் பட்டியல் வெளியேற்றம் குறித்த சிறப்பு பார்வை: வரணாஸ்ரம சாதி கட்டமைப்பை பாதுகாக்கும் இடதுக்கீடும்.. டாக்டர் கிருஷ்ணசாமி குரலின் நியாயங்களும்...! ``சாதி கட்டமைப்பை பாதுகாக்கும் இடஒதுக்கீடு”.. என - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கார்டூனிஸ்ட் பாலாவின் பட்டியல் வெளியேற்றம் குறித்த சிறப்பு பார்வை: வரணாஸ்ரம சாதி கட்டமைப்பை பாதுகாக்கும் இடதுக்கீடும்.. டாக்டர் கிருஷ்ணசாமி குரலின் நியாயங்களும்...! ``சாதி கட்டமைப்பை பாதுகாக்கும் இடஒதுக்கீடு”.. என

``சாதி கட்டமைப்பை பாதுகாக்கும் இடஒதுக்கீடு”.. என்ற தலைப்பை பார்த்ததும்.. என்மீது கோபத்துடன் பாய்ந்து வரும் நண்பர்களுக்காக முதலிலே சொல்லிவிடுகிறேன்..

நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. சாதியின் பெயரால் பாதிக்கப்படும் மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் என்பதே என் பார்வை..

அதனால் பொறுமையாக போய் தண்ணியைக் குடித்துவிட்டு வந்து இந்த பதிவை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சில தினங்களுக்கு முன் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் புதியதலைமுறை பேட்டியை பார்த்தேன்.

``தங்கள் சாதிப்பெயரை தேவேந்திர குல வேளாளராக மாற்ற வேண்டும்.. sc பட்டியலில் இருந்து தங்கள் சமூகத்தை வேறொரு பட்டியலுக்கு மாற்ற வேண்டும்” என்பதுதான் அவரது பேட்டியின் முக்கியமான சாரம்சம்.

நண்பர்கள் பலரும் அதை கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.

அந்த விமர்சனங்களை கடந்து எனக்கு கிருஷ்ணசாமி மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாக தோன்றியதால் இந்த பதிவை எழுதுகிறேன்.

இந்திய சாதிய கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. படிநிலை கட்டமைப்பாகவும் பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்கான மரியாதையையும் இழிவையும் தீர்மானிக்கும் வர்ணாஸ்ரம் தன்மையுடன் இருக்கிறது.

சாதி என்பது நேரிடையாக தெரியக்கூடிய ஊனமோ அல்லது நிறமோ அல்ல. அது மூளையில் பதிவேற்றப்பட்ட ஒரு வைரஸ் கிருமி. அது இந்திய சமூகத்தைப் பிடித்து ஆட்டுகிறது.

இதன் பொருட்டே முள்ளை முள்ளால் எடுக்கும் வகையில் சாதியால் பாதிக்கப்பட்டவர்களை பொருளாதாரரீதியாக கைத்தூக்கிவிட இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. கவனிக்க.. இடஒதுக்கீடு சாதி ஒழிப்புக்காக கொண்டுவரப்படவில்லை. அது ஒரு பிரதிநிதித்துவம்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை பயன்படுத்தி பலரும் பொருளாதாரரீதியில் மேலே வந்திருக்கிறார்கள்.

கிருஷ்ணசாமியும் அப்படிதான் மருத்துவராக மேலே வந்திருக்கிறார். எம்.எல்.ஏ. ஆனதும் அப்படியான இடஒதுக்கீடு எனும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான்.

ஆனால் சமயங்களில் நல்லவிசயங்களிலும் சில பின்விளைவுகள் இருப்பதுபோல் இடஒதுக்கீடும் சில பின்விளைவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

எப்படி பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு வர்ண தர்மத்தை படிநிலை கட்டமைப்பு இருக்கிறதோ.. அந்த கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் இடஒதுக்கீடு பட்டியல் ( fc, bc obc, sc ) முறையும் அமைந்திருக்கிறது.

இந்த பட்டியலுக்குள் இருக்கும் சாதியினர் என்னதான் பொருளாதாரரீதியில் மேலே வந்தாலும் சமூக மதிப்பீட்டில் அதே வர்ணாஸ்ரம தன்மையுடனே பார்க்கப்படுகிறார்கள்.

இங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் விவாவதங்களின் போது கவனித்துப்பாருங்கள்.. மற்றவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டை பயன்படுத்தினாலும் அந்த சமயத்தில் மட்டும் sc பட்டியலில் இடஒதுக்கீடு பெறுபவர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள்.

இதிலிருந்துதான் நாம் தேவேந்திரகுல வேளாளர் மக்களின்.. கிருஷ்ணசாமியின் கோரிக்கையை பார்க்க வேண்டும்.

சாதி ஒழிப்பு என்பதை வலியுறுத்திய சமூக செயற்பாட்டாளாராக இருந்தவர்கள்தான் கிருஷ்ணசாமியும் அந்த சமூக மக்களும். கீழ்வெண்மனியில் எரித்துக்கொல்லப்பட்ட மக்களும் அவர்கள்தான்.

ஆனால் சாதி ஒழிப்பு பேசும் முற்போக்காளர்கள் உட்பட 100க்கு 98 சதவீதம் பேர் தங்கள் சாதி சொல்கிறான் எனும்போது மீதி இருக்கும் 2 சதவீதம் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும் சாதி மறுப்பு பேசினால் என்னாகும்.. சாதி மறுப்பு பேசுபவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்ற நிலை மட்டுமே இருக்கும்.

அந்த அடிப்படையில் தேவேந்திர குல சமூகம், வேறு வழியில்லை.. வெளிப்படையாக நம் சமூகத்தை சொல்லி அரசியல் செய்வோம் என்று புதிய பயணத்தை துவக்கியிருக்கிறார்கள். பட்டியலின மக்களில் ஓரளவுக்கு நிலமும் பொருளாதாரமும் கொண்டவர்கள்.

இயல்பாகவே போர்க்குணம் கொண்டவர்கள். தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்முறைகள் கொஞ்சம் கட்டுக்குள் வந்திருக்கிறது என்றால் அதற்கு அந்த மக்களின் `திருப்பி வெட்டு’ என்னும் பாலிசிதான். இதை குறிப்பிடுவது சரியல்லதான்.. ஆனால் எதார்த்தம் அதுதான்.

பக்கம்பக்கமாக சாதி ஒழிப்பு குறித்து உரையாற்றியவர்களும் காவல்துறையும் சட்டமும் செய்யாததை அவர்களின் திருப்பி வெட்டு செய்ததது. அதனால் இருபிரிவினருக்கிடையே ஒற்றுமையின்மை எனும் சில பின்விளைவுகள் உண்டுதான். ஆனால் இதுவரை ஒரு தரப்பு அருவாள் மட்டுமே வீசிக்கொண்டிருந்ததை நிறுத்தியது திருப்பி வெட்டு விழும் என்ற அச்சம்தான்.

இங்கு ஒருவருக்கு சமூகவிடுதலைதான் முக்கியமானது. இன்று ஏழையாக இருக்கும் ஒருவர் அடுத்த தலைமுறையில் பொருளாதாரரீதியில் மேலே வர முடியும். ஆனால் சாதி பட்டியலில் கடைசிவரை எந்த நிலையில் இருக்கிறார்களோ.. அதுவே தொடரும்.

அதனாலயே இங்கு ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதிக்கு புது பெயரை சூட்டுகிறார்கள். ஏனெனில் காலம் காலமாக இருக்கும் சாதி அடையாளப்பெயர்களிலிருந்து எந்த சாதி விடுதலையும் சாத்தியமாகது என்ற எதார்த்தை உணர்கிறார்கள்.

குற்றப்பரம்பரையாக திருடர்களாக ஒதுக்கப்பட்ட கள்ளர் உள்ளிட்ட சமூகம் தேவர் எனும் புதுப்பெயருக்குள் அடங்கியது.

சாணார் என்று இழிவு படுத்தப்பட்டவர்கள் நாடார் என்று புதுப்பெயருக்குள்ளும், கோனார்கள் யாதவர்களாகவும் என்று ஏற்கனவே பொதுப்புத்தியில் ஏளனமாக பதிவு செய்யப்பட்ட பெயருக்கு மாற்றாக புதுப்பெயருக்குள் சென்றார்கள்.

தன் சமூகத்திற்கு இருந்த பெயரை ஒரேஒரு அரசாணையின் மூலம் இசைவேளாளராக கருணாநிதி அறிவித்துக்கொண்டது எப்படி சரியோ.. சக்கிலியர்சாதி அருந்ததியர்களாக பெயர் மாறியது எப்படி சரியோ, அப்படியே தேவேந்திர குல மக்களின் கோரிக்கையும் சரியே.

ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் நம்மபெருசுகள் எல்லாம் டிக்கெட் வாங்கிவிடுவதால் வருகிறபுது தலைமுறை அடுத்தகட்டத்திற்கு வரும்.இது அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும்.

புது தலைமுறைக்கும் அதே அவமானங்களை கடத்தக்கூடாது.. ஏனெனில் சாதி கொடுக்கும் உளவியல் சிக்கல் பெரிது. அதனால்தான் மார்பு சீலை அணிய மறுக்கப்பட்ட வரலாறை பாடத்திட்டத்திலிருந்து நீக்கக்கோரி அந்த சமூகம் போராடியது.

பெயருக்குப்பின் சாதிப்போட மறுத்த தலைமுறை போய் இப்போது என்ன அர்த்தம் என்று தெரியாமலே சாதிப்பெயரை குறிப்பிடும் தலைமுறை உருவாகிவிட்டது.   தோள் சீலை அணியும் போராட்டம் குறித்து இன்று அந்த சமூகத்தை சேர்ந்த எத்தனை குழந்தைகளுக்கு தெரியும் என்று யோசியுங்கள். தெரியாமல் இருப்பது சரி.  அது அவசியமற்றது.

அந்த அடிப்படையில் தேவந்திர குல வேளாளர் சமூகமும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதற்கான முயற்சியின் வெளிப்பாடுதான் அவர்கள் தங்களை வேறு பட்டியலுக்கு மாற்ற சொல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால் இப்போது அவர்கள் பயணிக்கும் பாதையின் மூலம் இன்னும் ஒரு 25 ஆண்டுக்களுக்குப்பின் அந்த சமூக குழந்தைகள் சாதி குறித்து எந்த அவமானங்களும் இல்லாமல் இயல்பாக இருப்பார்கள்.

சாதி ஒழிப்பு என்பது உன்னதமானது. ஆனால் அதை ஒழிப்பது என்பது முடியாது என்று நம்புபவர்கள், எந்த சாதியும் எவருக்கும் இழிவு அல்ல..அவனவனுக்கு அவன் சமூகம் பெருமை என்ற அடிப்படையை நோக்கி போக விரும்புவதை தடுக்க நாம் யார்..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா 7-05 -2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here