கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக-விசிக ஆகியவை திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தன. அதற்கு முன்பும் பாமக நிறுவனர் ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நல்ல நட்புடன் இருந்துவந்தனர். பல்வேறு போராட்டங்களிலும் இணைந்து போராடி வந்தனர். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற தருமபுரி கலவரத்தைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையே மோதல் உருவானது. அதிலிருந்து இதுவரை மோதல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனுடன் சன் தொலைக்காட்சி தொகுப்பாளர் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி இன்று (மார்ச் 11) இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக வெளியிடப்பட்ட வீடியோவில் விசிக தலைவர் திருமாவளவனிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் "ஒருவேலை தைலாபுரம் தோட்டத்துக்குப்போய் நிற்கும் சூழல் திருமாவுக்கு வந்தால்" என்ற கேள்வியை எழுப்புகிறார். இதற்கு கோபத்துடன் பதில் சொல்லும் திருமாவளவன், "அந்த இடத்திலேயே தூக்குப்போட்டு செத்துவிடுவேன்" என்று கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து முகநூலிலும் வாட்ஸ்-அப்பிலும் திருமாவளவனைக் கண்டித்து கடுமையான வார்த்தைகளைப் பதிவு செய்து வருகின்றனர் பாமகவினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாமக தலைமைக்கு எதிராக விசிகவினர் வார்த்தைகளை அள்ளிவீசி வருகின்றனர். சமூக வலைதளங்களைப் பொறுத்தவரையில் பாமகவின் பவர் அதிகமாக விசிகவினரால் பதிலடிக் கொடுக்கமுடியாமல் திணறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் உருவாகியிருக்கும் இந்த கடுமையான வார்த்தைகள் மோதல் நேரடியாக மக்களைப் பாதிக்குமா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உருவாகி வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சேகரித்து சைபர் க்ரைம் காவல்துறையினர் காவல் துறை தலைமைக்கும் அனுப்பியுள்ளனர். தலைவர்கள் பொதுவான இடத்தில் வெளிப்படையான கருத்துகளை மிகக் கவனமாக பேசுவது சிறந்தது என்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக