பத்மாவத் திரைப்படத்தில் வரும் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் தனக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம்கானை நினைவுபடுத்துவதாக நடிகை ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.
தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் உத்தர பிரதேசத்தில் 2 முறை ராம்பூர் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
இது குறித்து ஏஎன்ஐ செய்திக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “அண்மையில் பத்மாவத் திரைப்படத்தை பார்த்தேன். அதில் வரும் அலாவுதீன் கில்ஜி பாத்திரம் எனக்கு ஆசம்கானைத்தான் நினைவுபடுத்தியது. இரண்டாவது முறையாக (2009) சமாஜ்வாதி கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோது என்னை அந்த அளவிற்குக் கொடுமைப்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, “அப்போது எனக்கு எதிராக ஆபாச புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு பொதுமக்களிடம் ஆசம்கான் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்தனர். வாய்மொழியாகவும் என்னை வசைபாடித் தீர்த்தனர். அவர்கள் பேசிய வார்த்தைகள் ஒரு பெண் வெளியில் கூற முடியாதவை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆசம்கானும் ஜெயப்பிரதாவும் ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டனர். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜெயப்பிரதா பழைய நினைவுகளைக் கூறி ஆசம்கானை தாக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக