கருப்புப்பணம் பெருத்துவிட்டதா? ? கடந்த இரு வாரங்களாக பண மதிப்பழிப்பின்போது ஏற்பட்டது போலவே புழக்கத்துக்கான ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை எனப் புகார் பரவலாக எழுந்துள்ளது. பண மதிப்பழிப்புக்கு முன்பு எவ்வளவு பணம் புழக்கத்தில் இருந்ததோ அவ்வளவு பணமும் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டுவிட்ட போதும் ஏன் இந்தத் தட்டுப்பாடு?  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கருப்புப்பணம் பெருத்துவிட்டதா? ? கடந்த இரு வாரங்களாக பண மதிப்பழிப்பின்போது ஏற்பட்டது போலவே புழக்கத்துக்கான ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை எனப் புகார் பரவலாக எழுந்துள்ளது. பண மதிப்பழிப்புக்கு முன்பு எவ்வளவு பணம் புழக்கத்தில் இருந்ததோ அவ்வளவு பணமும் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டுவிட்ட போதும் ஏன் இந்தத் தட்டுப்பாடு? 

பொருளாதாரம், அரசின் சட்டத் திட்டங்களுக்குட்பட்டு நடந்தால் அது அமைப்பு சார்ந்த பொருளாதாரம். இந்த வரம்புக்குள் வராமல் அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒரு வரியையும் செலுத்தாமல் இயங்கும் பொருளாதாரத்தை இணை பொருளாதாரம் (Parallel economy) என அழைப்பர். இதில் புழங்கும் பணம், கறுப்புப் பணமாகும் சாத்தியம் கூடுதலாகும். இந்திய அரசு தனது பிடியை இறுக்க முனைந்து அதன் வாயிலாக இணை பொருளாதாரத்தை அமைப்புக்குள் கொண்டுவர பெரு முயற்சி செய்து வருகிறது. பண மதிப்பழிப்பு நடவடிக்கையின் வாயிலாக கறுப்புப் பணத்தை எல்லாம் ஒழித்து விடலாம் என எண்ணினர். ஆனால் அந்தப் பணமெல்லாம் வங்கிக்கு வந்து வெள்ளைப் பணமாக மாறிவிட்டது. இவ்வாறு பணம் வெள்ளையாக மாறியதால் இனி இணை பொருளாதாரம் இயங்காது என்று அரசு நம்பியது. அதை உறுதி செய்யவே பண மதிப்பழிப்பு அறிவிக்கப்பட்டு சில மாதங்களிலேயே ஜிஎஸ்டி வரி முறை செயல்படுத்தப்பட்டது. உற்பத்தியிலிருந்து விற்பனை வரை அனைத்துக் கண்ணிகளும் ஒரு வலைப்பின்னல் எனப்பட்டதால் வரி ஏய்ப்பு அவ்வளவு எளிதாக நடைபெறாது என அரசு கருதியது. அதுமட்டுமல்ல, ஜிஎஸ்டி வரித்திட்டத்தின் வாயிலாகப் பணப்புழக்கத்தை முற்றிலும் கண்காணிக்க இயலும். இதனால் வருமானத்தை மறைப்பது இயலாது. நேரடி வரியாகிய வருமான வரியும் இதனால் உயரும் என அரசு எதிர்பார்த்தது. ஆனால் வருமான வரி எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

ஜிஎஸ்டி வரியின் வலைப்பின்னலில் பலரும் உள்ளே வரவில்லையோ என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. முன்பெல்லாம் (ஜிஎஸ்டிக்கு முன்) தொழிலிலும் வர்த்தகத்திலும் அமைப்பு சார்ந்த பொருளாதாரமும் அமைப்பு சாரா பொருளாதாரமும் பின்னிப் பிணைந்து இயங்கின. சில பரிவர்த்தனைகள் வங்கிகள் வழியாகவும் சில பரிவர்த்தனைகள் ரொக்கமாகவும் நடைபெற்றுவந்தன. பண மதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்த முறை ஒழிக்கப்பட்டு முழுவதும் அமைப்புக்குள்ளே மட்டுமே அனைத்துப் பரிவர்த்தனைகளும் நடைபெறும் என நம்பப்பட்டது. இந்த இரண்டு நடவடிக்கைகளினால் ரொக்கம் பெருமளவில் புழங்கிய வேளாண்மை, ரியல் எஸ்டேட் மற்றும் சிறு குறு தொழில்கள் கடந்த இரு ஆண்டுகளாகவே பெரும் சரிவைச் சந்தித்தன. அமைப்பு சாரா நிறுவனங்களின் சந்தையை அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் பிடித்துவிடும். அல்லது அத்தகைய நிறுவனங்கள் அமைப்புக்குள் வந்துவிடும் எனக் கணித்தது ஒன்றிய அரசு. பெருமளவில் வேலை இழப்பும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டதுதான் மிச்சம். எதிர்பார்த்த பயன் விளையவில்லையோ என நாம் சந்தேகிக்க இப்போது காரணங்கள் உள்ளன.

கடந்த இரு வாரங்களாக பண மதிப்பழிப்பின்போது ஏற்பட்டது போலவே புழக்கத்துக்கான ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை எனப் புகார் பரவலாக எழுந்துள்ளது. பண மதிப்பழிப்புக்கு முன்பு எவ்வளவு பணம் புழக்கத்தில் இருந்ததோ அவ்வளவு பணமும் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டுவிட்ட போதும் ஏன் இந்தத் தட்டுப்பாடு? அரசியல் காரணங்கள் ஒருபுறம்.

அதாவது தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பணத்தை ரொக்கமாகச் செலவழிக்க எடுத்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படியானால் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் கட்சிகள் ரொக்கமாகச் செலவழிக்காமல் இல்லை. அப்போதெல்லாம் ஏற்படாத தட்டுப்பாடு இப்போது ஏன் ஏற்படுகிறது? ஆக, இதுதான் காரணம் எனக் கொள்வது சரியாக இல்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இரண்டாவதாக, முடங்கிய வேளாண்மை, ரியல் எஸ்டேட் மற்றும் சிறு குறு தொழில்கள் மீண்டெழுந்து ரொக்கத்தை பயன்படுத்தத் தொடங்கியதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்படுகிறதா என எண்ணினால் இத்துறைகள் மீண்டெழவில்லை என்பது இக்கூற்றைப் பொய்யாக்கி விடுகிறது.

மூன்றாவதாகப் பொருளாதாரம் கடந்த இரண்டாண்டுகளில் வளர்ந்துள்ளதற்கு ஏற்ப பணம் புழக்கத்தில் இல்லை அல்லது சுழற்சியில் இல்லை என்பது மற்றுமொரு விளக்கம். ஆனால் ஜிஎஸ்டி அமல் ஆன பின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் வங்கிகள் வாயிலாக நடைபெற்றதால் புழக்கத்துக்கு எதற்கு இவ்வளவு பணம் தேவை என்ற கேள்வி எழுகிறது. இது மட்டுமல்லாது ரிசர்வ் வங்கி தேவையான அளவில் ரூபாய் தாள்களை அச்சடித்து விநியோகிக்காததும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகிறது.

புதிதாக மற்றுமொரு விளக்கம் தற்போது வந்துள்ளது. இவ்வளவு பணம் புழக்கத்தில் விடப்பட்டும் தட்டுப்பாடு ஏற்பட ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். புழக்கத்தில் விடப்பட்ட பணம் மீண்டும் வங்கிகளுக்குள் வந்து செல்லாமல் தன்னியல்பாக வெளியிலேயே சுழல்வதால் இந்த நிலை என்பதே அப்புதிய விளக்கம். ஏன் இவ்வாறு அது வெளியிலேயே சுழல்கிறது? எப்படிச் சுழல முடியும்?

முன்பெல்லாம் பரிவர்த்தனையில் ரொக்கமும் வங்கி வழியும் பின்னிப் பிணைந்திருந்த நிலை மாறி இப்போது ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமே நடைபெறும் ஓர் இணை பொருளாதாரம் வங்கிகளுக்கும், ஜிஎஸ்டி வலைப்பின்னலுக்கும் முற்றிலும் வெளியே நடைபெற வேண்டும். அப்படி நடைபெறும்போது அந்தப் பொருளாதாரம் அரசின் கண்காணிப்புக் கண்ணிகளில் சிக்காது. அதனால் அரசு எவ்வளவு கிடுக்குப்பிடி போட்டாலும் அதனால் ஜிஎஸ்டி வரி வருவாயையோ அல்லது வருமான வரியையோ வசூலிக்க முடியாது. பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி ஆகிய நடைமுறைகளினால் கறுப்புச் சந்தையை ஒழிப்பதற்குப் பதிலாக, இந்த இரு நடவடிக்கைகளுமே அதனை ஊக்கப்படுத்தி வளர்ந்துவிட்டதால் இணை பொருளாதாரம் பெருகியிருக்கலாம். அதனால்தான் புழக்கத்துக்கு விடப்படும் ரொக்கம் மீண்டும் வங்கிகளுக்கு வராமல் மணலில் பாய்ந்த நீர் போல் மாயமாகிவிடுகிறது என்பது இவ்விளக்கத்தின் சாரம். இதனால் எந்த கறுப்புப் பணத்தையும் இணை பொருளாதாரத்தையும் முடக்க அரசு முயன்றதோ அது விசுவரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கலாம்.

இந்த இணை பொருளாதாரத்தின் பெருக்கத்தினால்தான்

1) புழக்கத்திலுள்ள தாள்களுக்கு பற்றாக்குறை-வங்கிகளில்

2) ஜிஎஸ்டி வரி வருவாய் எதிர்பாராத அளவு உயரவில்லை.

3) வருமான வரியும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை

மேலதிக புள்ளி விவரங்கள் பொதுவெளிக்கு வரும்போது இப்புதிய விளக்கம் சரியா, தவறா என்பது தெரியவரும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி.எஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். தமிழக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துக் கடந்த முப்பது ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ள்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here