கடந்த சில மாதங்களுக்கு முன்னா் வட கொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே போர் மூளும் அளவுக்குப் பகைமையான உறவுகள் இருந்தன . தற்போது தீடீரென இந்த நிலை மாறி இரு கொரிய அதிபர்களும் மனம் திறந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தென் கொரியாவிலுள்ள அமைதி இல்லத்தில் இந்த பேச்சுவார்த்தைகள நடைபெற உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளை இணைப்பது என்பது நீண்டகாலத் திட்டமாக இருந்தாலும் கொரிய நாடுகளிலும் கொரியப் போர்களின்போது பிரிந்து வாழும் குடும்பங்களும் உறவுகளும் தற்போது இணையும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனா். இதை விட முக்கியமாக, இப்பேச்சுவார்த்தைகளில் அணு ஆயுத உற்பத்தியைக் கைவிட்டு அணு ஆயுதமில்லாத மண்டலமாக மாற்றுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட உள்ளது. இதைத் தவிர இரு நாடுகளுக்கிடையே அரசியல் பேச்சுவார்த்தைகளும் பரஸ்பர கலாச்சாரப் பரிவா்த்தனைகளும் நடைபெற உள்ளன.
1950-53இல் இந்த இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூண்டது. அந்த போர் அமைதி ஒப்பந்தம் இன்றி முடிவுக்கு வந்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது நடந்தது போன்றே இந்த நாடுகளிலும் குடும்பங்களும் உறவுகளும் பிரிந்தனர். கொரியப் போர்களில் ஏறத்தாழ 12 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக 2000 த்திலும் 2007லிலும் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் அவற்றில் முன்னேற்றம் காணப்படவில்லை. தற்போது வடகொரிய அதிபரே எந்த வித ஈகோவும் இன்றி இரு நாடுகளுக்கிடையிலான ராணுவ எல்லையைத் தாண்டி வந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளும் முதலாளித்துவ மற்றும் கம்யூனிஸ்ட் அரசியல் அமைப்புகளைக் கொண்டவை. முற்றிலும் வேறுபட்ட இருவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கடைப்பிடிக்கும் நாடுகள் இணைவதற்கு முதல் படியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது சர்வதேச சமூகத்தினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் அமெரிக்க கொரிய உச்சி மாநாட்டிற்கானமுன்தயாரிப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சி மாநாடு விரைவில் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
இரு நாடுகளுக்கிடையில் 65 ஆண்டுகளாக நீடித்த பகை இப்போது முடிவுக்கு வருவதாக உள்ளது.
உலகம் முழுவதும் அரசியல் பகையைப் புறந்தள்ளி விட்டு அனைத்து நாடுகளும் அவற்றின் மக்களும் இணையலாம் என்ற நம்பிக்கையை இப்பேச்சுவார்த்தை அளித்துள்ளது.
இதே போன்று இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது பகைமையைச் சற்றுப் புறந்தள்ளிவிட்டு முறையான பேச்சுவார்த்தைகளை ஏன் தொடங்கக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இரு நாடுகளிலிலும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனா். பல கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிந்துள்ளன. உறவுகள் பிரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து உருவான காஷ்மீர் பிரச்சினையால் இதுவரை 1 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனா். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இதுவும் ஒரு பிரச்சினையாகத் தொடர்ந்து நீடித்துவருகிறது. அவ்வப்போது எல்லைப் புறங்களில் ராணுவ மோதல்களும் நடந்துவருகின்றன.
கொரிய நாடுகளின் உதாரணத்தை நாம் ஏன் பின்பற்றக் கூடாது? இரு நாடுகளும் ஏன் கொரிய நாடுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளக் கூடாது?
- சேது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக