இதுகுறித்து தமிழக தொழிலாளர் நலத் துறை நேற்று (மே 18) வெளியிட்டுள்ள அறிக்கையில், நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் 2011ஆம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மாதம்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றன.
தொழிலாளர் துறை ஆணையர் இரா.நந்தகோபால் அறிவுரைப்படி, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள இறைச்சி, மீன் கடைகள், சந்தைகளில் அமலாக்க அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட 1,151 கடைகளில், 237 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ், சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் விற்கப்படும் மைதா, கோதுமை, ரவை மற்றும் இறக்குமதி உரிமம் பெறாமல் விற்கப்படும் சிகரெட், வாசனைத் திரவியங்கள் மற்றும் பொட்டலப் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக சட்ட ரீதியான அறிவிப்புகள் இல்லாதது மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைவிட அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து 847 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில், 163 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதுபோன்று, ஏப்ரல் மாதத்தில் 773 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ.7 லட்சத்து 45 ஆயிரத்து 800 இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் பங்க்குகளில் அளவு குறைவு தொடர்பாக 101 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பெறப்பட்டது. பொட்டலப் பொருட்கள் விதியை மீறிய 209 நிறுவனங்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்து 500 இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விதிமீறல்கள் இருப்பின் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை தொழிலாளர் துறை அறிமுகப்படுத்திய ‘TN-LMCTS’ என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக