தமிழகத்தில் 20 மாவட்டங்களில் ஆசிரியர் பட்டய பயிற்சி வகுப்புகளை மூடுவதற்குத் தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆரம்பக் கல்வியை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு உத்தரவின்படி, 1992ஆம் ஆண்டு மாவட்ட அளவில் கல்வி பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் இந்த நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சி பட்டய வகுப்புகளும் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் 20 மாவட்டங்களில், மாவட்டக் கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சி பட்டய வகுப்புகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அனைத்து மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று (மே 26) விசாரணைக்கு வந்தபோது, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு உத்தரவு இருப்பதாகவும், பட்டய வகுப்புகள் மூடப்படுவதால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு ஜூன் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளருக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக