இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் நிலநடுக்க ஆய்வுக் கருவியைப் பொருத்தி, செவ்வாய் கோளின் நிலநடுக்கங்களை இக்கருவி உணர்ந்து ஆராயும்.
செவ்வாயின் தரையின் உள்ளே இருக்கும் பாறை அடுக்குகளின் தன்மையை இந்த அதிர்வுகள் மூலம் அறியமுடியும். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகளை பூமியின் தரவுகளோடு ஒப்பிடுவதன் மூலம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் உருவான விதம் பற்றிய புதிய விளக்கங்களைப் பெற முடியும்.
"செவ்வாயின் நிலநடுக்க அதிர்வுகள் மாறுபட்டப் பாறைகளின் ஊடாகப் பரவும்போது, அந்தப் பாறைகளின் தன்மைகள் தொடர்பான தகவல்களை அதிலிருந்து பெறமுடியும்" என்று விளக்குகிறார் இன்சைட் பயணத்தின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் புரூஸ் பேனர்ட்.
"சீஸ்மோமீட்டர் பதிவு செய்யும் சீஸ்மோகிராம் என்னும் அதிர்வு வரைபடத்தின் ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுவது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். வெவ்வேறு திசைகளில் நடக்கும் பல பல செவ்வாய் நடுக்கங்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிறகு செவ்வாயின் உள் அமைப்பைப் பற்றிய ஒரு முப்பரிமாண சித்திரத்தை உருவாக்க முடியும்," என்கிறார் அவர்.
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வேண்டன்பெர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லாஸ் ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி காலை 04.05 மணிக்கு இன்சைட் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் வானில் அடர்த்தியான பனிப்புகை சூழ்ந்திருந்தது செயற்கைக் கோள் ஏவுவதை பாதிக்கவில்லை.
1970களில் முயற்சி தோல்வி
வைக்கிங் தரையிறங்கிகள் மூலம் 1970களிலேயே சீஸ்மோமீட்டர் கருவிகளை செவ்வாய்க்கு அனுப்பியது நாசா. ஆனால், தரையிறங்கிகளின் உடலிலேயே இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட அந்தக் கருவிகளால் செவ்வாய்த் தரையில் இருந்து அதிர்வுகளை உணர முடியாமல் போனது.
காற்று வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தரையிறங்கி அதிரும் சத்தத்தை மட்டுமே அந்தக் கருவிகளால் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், அதற்கு மாறாக, இன்சைட் செயற்கைக் கோள் நேரடியாக தனது சீஸ்மோமீட்டரை செவ்வாயின் தரையில் பொருத்தவுள்ளது.
மெல்லிய அதிர்வுகள் போதும்
ஓராண்டு காலத்தில் எத்தனை செவ்வாய் நிலநடுக்கங்களை இந்தக் கருவி பதிவு செய்யும் என்பது நிச்சயமற்றது. ஆனால், சில டஜன் அதிர்வுகள் பதிவாகலாம் என்று ஒரு மதிப்பீடு உள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை 3 புள்ளிகளுக்கும் குறைவான வீரியத்தில் இருக்க வாய்ப்புள்ளது. பூமியில் நடந்தால் நடந்ததுகூடத் தெரியாமல் மக்கள் தூங்கக்கூடிய அளவு மிக மென்மையானவை இவை.
ஆனால், இவ்வளவு மென்மையான நடுக்கங்களேகூட, செவ்வாயின் தரைக்குக் கீழே உள்ள அமைப்பு பற்றிய போதிய தகவல்களை தரக்கூடியவையாக இருக்கும். இதைக் கொண்டு செவ்வாயின் அடியாழங்களைப் பற்றியும், அமைப்பைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஒரு மாதிரியை உருவாக்கமுடியும்.
இந்தத் திட்டத்தில் செவ்வாய்த் தரையில் வெளிப்படும் கீழ் அலையெண் கொண்ட அதிர்வுகளை கண்டுபிடிக்கும் பிராட்பேண்ட் உணர்விகளை பிரான்ஸ் அளித்துள்ளது. உயர் அலையெண் அதிர்வுகளை உணரும் மைக்ரோ சீஸ்மோ மீட்டர்கள் மூன்றினை பிரிட்டன் தந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் பவுண்டு நாணயத்தின் அளவே உள்ளவை.
ஜெர்மன் தொழில்நுட்பத்தோடு இன்சைட்டில் வடிவமைக்கப்பட்ட சுத்தியல் போன்ற ஒரு கருவி செவ்வாயின் தரையை 5 மீட்டர் அளவுக்குத் தோண்டி ஆழத்துக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செவ்வாயின் தரையின் உள்ளே உள்ள வெப்பத்தை ஆராய்வதன் மூலம் அதன் மேற்பரப்பில் மாற்றத்தை உண்டாக்குவதற்கு அதனிடம் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதை அது கணக்கிடும்.
captionசெவ்வாயின் வளிமண்டலத்தை இன்சைட் செயற்கைக் கோள் விநாடிக்கு 6 கி.மீ. வேகத்தில் தொடும்.
எல்லா தரையிரங்கும் விண்வெளித் திட்டங்களைப் போலவே செவ்வாயின் வளிமண்டலத்தில் நுழைவதும் தரையிறங்குவதும் இன்சைட்டுக்கு சவால் மிகுந்ததாகவே இருக்கும். விநாடிக்கு 6 கி.மீ. வேகத்தில் அது செவ்வாயின் வளிமண்டலத்தைத் தொடும். பிறகு உடனடியாக தனது வேகத்தை படிப்படியாக மட்டுப்படுத்தி தரையிறங்கும் போது அப்படியே நிற்கும் நிலைக்கு அது வந்தாகவேண்டும். சவால் நிறைந்த இந்தப் பணிக்கு 7 நிமிடங்கள் ஆகும். இதனை "ஏழு நிமிட பயங்கரம்" என வருணிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக