கட்சியையும் சின்னத்தையும் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்று எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன்பு சசிகலாவிடம் சத்தியம் வாங்கியதாக திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் புதிதாக ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனுக்கும், சசிகலா சகோதரர் திவாகரனுக்கும் இடையே அண்மையில் மோதல் வெடித்தது. இதையடுத்து திவாகரன் அம்மா அணி என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார். தினகரன் மீது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், திவாகரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாகத் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் சென்னையில் நேற்று (மே 2) செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் மகன் ஜெய் ஆனந்த், “சசிகலாவின் இனிஷியல் என்பதே அதிமுகதான். அவர் சிறைக்குச் செல்லும் முன்பு அதிமுக கட்சியையும், கொடியையும், இரட்டை இலை சின்னத்தையும் தினகரனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். தற்போது அதிமுகவையே இல்லாமல் செய்துவிட்டு சசிகலாவின் இனிஷியலையே மாற்ற முயல்கிறார் தினகரன்” என்று குற்றம்சாட்டினார்.
“இறப்பதற்கு முன் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் எப்போதும் காப்பாற்ற வேண்டும் என்று சசிகலாவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு எம்.ஜி.ஆர் இறந்தார் என்று பலரும் கூறியுள்ளனர். அதுதான் வரலாறும். நிலைமை இப்படி இருக்க சசிகலா தற்போது அதிமுகவில் செயல்படுவாரா அல்லது அமமுகவில் செயல்படுவாரா” என்று கேள்வி எழுப்பிய ஜெய் ஆனந்த், “அமுமகவில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவதில் இதுபோல பல சிக்கல்கள் உள்ளன” என்றும் கூறியுள்ளார்.
“நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். பிரிவை ஏற்படுத்தியவர்கள் அவர்கள்தான். கட்சியில் முக்கியத்துவத்தையோ, பதவியையோ எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு மனிதன் சக மனிதனுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதை அங்கு இல்லை. நேற்று வரை தினகரனை நல்ல தலைவர் என்றுதான் நினைத்திருந்தோம். மூத்தவர்களை மதிக்கத் தெரியாதவர் நடிப்பின் மூலம் மட்டுமே நல்ல தலைவர் என்ற பெயரை எடுத்திருக்கிறார். இதை நாங்கள் உணர்ந்துவிட்டோம். அதனால் வெளியேறிவிட்டோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்று சிறை செல்லும் முன் சசிகலா சத்தியம் வாங்கினார். சசிகலாவுக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளதால் எடப்பாடி ஆட்சியை எதிர்க்க மாட்டோம். தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி குறைபாடுள்ள ஆட்சிதான்” என்றும் ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
f Use
pageLoad 1.54 seconds.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக