இதுபோன்று,யாருமே திருமணத்துக்கு வரதட்சணை கேட்டிருக்கமாட்டார்கள். ஒடிசாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர்,வரதட்சணையாக 1,000 மரக்கன்றுகளை கேட்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா, மாவர்கேந்திரபுரா மாவட்டம் பாலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் காந்த் பிஸ்வால்(33) என்பவர் உள்ளூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வரதட்சணையாக, மணமகள் வீட்டாரிடம் 1,000 மரக்கன்றுகளை கேட்டுள்ளார் பிஸ்வால்.
இவர், மரம் வளர்ப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர். இவர், ‘மரம் ஒரு நண்பர்’ என்ற விழிப்புணர்வு குழுவின் உறுப்பினராக இருக்கிறார். அதில், காடுகளை அழித்தல், மரம் நடுதல்,போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதுபோன்ற, தன்னுடைய விருப்பத்துக்கு ஒத்துப்போகிற வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்தார். அவர்தான், ரேஷ்மி ரேகா. இதையடுத்து,இவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி திருமணம் நடந்தது. மற்ற திருமணங்களை விட இவர்களின் திருமணம் உண்மையிலேயே சமூகத்துக்கு பலன் கொடுக்கும் வகையில் அமைந்தது.
பிஸ்வால்,தனக்கு வரதட்சணையாக வந்த மரக்கன்றுகளை,கிராம மக்களுக்கு பிரித்து கொடுத்தார். அதுபோன்று, திருமணத்துக்கு வந்தவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
வரதட்சணை வாங்குவது எனக்கு பிடிக்காது. மரத்தை பாதுகாப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு, என் திருமணத்தை விட வேறு எந்த சந்தர்ப்பமும் நன்றாக இருக்காது. அதனால்தான், இந்த முடிவை எடுத்தேன் என பிஸ்வால் கூறினார்.
நாங்கள் இருவரும் ஆசிரியர் என்பதால், எங்கள் மாணவர்களுக்கும் இதுபோன்ற எண்ணங்கள் உருவாக ஊக்குவிக்க முடியும். மற்றவர்களும், ஒரு புதுமையான வழி மூலம் மக்களிடையே மரம் வளர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்போதுதான்,நம் நாடு எங்கும் பசுமையாக காட்சியளிக்கும் என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக