கன்னியாகுமரி: ஏழகரம் அரசு உயர்நிலை பள்ளியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஏழகரம் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் அருகில் இருந்த நூலகத்திற்குள் தீ மளமளவென பரவியது.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீயில் எரிந்த பொருள்களின் மொத்த மதிப்பு மூன்று லட்சம் இருக்கும் என பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், பழங்கால கட்டடத்தை மாற்றியமைக்க அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளி விடுமுறை நாள் என்பதால் பொருள் சேதத்துடன் நின்றதாகவும், இதுவே பள்ளி வேலை நாளில் தீ விபத்து நடந்திருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக