பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதற்கு, கடந்த 3ஆம் தேதி தொடங்கிய ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நாளை விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்ற நிலையில் நேற்று வரை 1 லட்சத்து 40 ஆயிரத்து 516 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர மாற்றுக் கல்வி வாரியங்களில் பயின்ற 5 ஆயிரம் பேர் தனியாக விண்ணப்பித்துள்ளனர். அதன்படி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை லட்சத்து 45 ஆயிரமாக உள்ளது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பப் பதிவைத் தொடர்ந்து அடுத்ததாக மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஜூலையில் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தகவலின்படி, தமிழகத்தில் 2013-14ஆம் கல்வியாண்டில் 565 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இதில் மொத்தம் 2,83,715 பிஇ இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் 1,77,110 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,06,605 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
2014-15 கல்வியாண்டில் 572 பொறியியல் கல்லூரிகளில், 2,94,484 இடங்களில், 1,61,756 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,32,728 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 533 ஆகக் குறைந்தது. இவற்றில் 2,85,254 இடங்களில், 1,59,042 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,26,212 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.
இதுபோன்று அடுத்தடுத்து மாணவர்களின் சேர்க்கையும், கல்லூரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவந்த நிலையில் தற்போது பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக