முறைப்படி பென்ஷன் வழங்காததால் முதியவர் ஒருவர் பாம்பைக் கொண்டுவந்து மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம் ரோனாவைச் சேர்ந்தவர் மாபு சாபா ரஜேகான் (68). இவர் பணியில் இருந்து ஓய்வுபெற்று பென்ஷன் வாங்கி வாழ்க்கையை நடத்திவருகிறார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இவருக்கு பென்ஷன் வழங்கப்படவில்லை. இதனால் பெரிதும் சிரமப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சாபா, பென்ஷன் வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட வங்கி, தபால் நிலையம், பென்ஷன் வழங்கும் அலுவலகம் என அனைத்துக்கும் அலைந்து திரிந்துள்ளார். எனினும் எந்தப் பலனும் இல்லை.
வயது முதிர்வாலும், நோயின் தாக்கத்தாலும் போதிய பணம் இல்லாமல் அவதிப்பட்டுவந்த சாபா நேற்று (ஜூன் 8) விநோத முயற்சி ஒன்றைக் கையிலெடுத்துள்ளார்.
அதாவது நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்துவந்து, பென்ஷன் வழங்கும் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், பென்ஷன் வழங்க முடியுமா அல்லது பாம்பை விடவா என்று கூறிக்கொண்டே அதிகாரியின் கழுத்தில் பாம்பைப் போட முயன்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசிய சாபா, “நான் எதை வைத்துச் சாப்பிடுவேன். என்னால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. பென்ஷன் உடனே வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதையடுத்து மூன்று முதல் நான்கு நாட்களில் பென்ஷன் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து, பாம்பை எடுத்துச் சென்று, அருகில் உள்ள நிலப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார் சாபா.
சாபா மட்டுமல்ல; அவரைப் போல பல முதியவர்கள் பென்ஷன் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக