2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி அதிகமாக உள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 40 சதவிகித உயர்வுடன் மொத்தம் 16.34 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகச் சீனா தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றாக இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியாளராகச் சீனா உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தி, இந்தியாவின் சிறு நிறுவனங்களும் சீனாவில் வர்த்தக வாய்ப்புகளைப் பெறும் நோக்கில் ’சீனா - தெற்காசிய ஏற்றுமதி - இறக்குமதிக் கண்காட்சி’ ஜூன் 14 முதல் 20 வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்களைக் காட்சிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பின் தலைவரான கணேஷ் குமார் குப்தா எஸ்.எம்.இ. டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக