இந்தியா உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 8,549 பொருட்களுக்கான கட்டணத்தைக் குறைப்பதாக சீனா அறிவித்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டணத்தை இவ்விரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தி வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளுடனும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் அரசு இதுபோன்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. இவ்விரு நாடுகளுடனான போட்டி காரணமாக இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளுக்கு வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியா, லாவோஸ், வங்கதேசம், தென்கொரியா, இலங்கை ஆகிய ஐந்து நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டணத்தைக் குறைக்க அல்லது ரத்து செய்ய சீன அரசு தற்போது முடிவுசெய்துள்ளது.
ஆசிய பசிபிக் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவைச் சீனா மேற்கொண்டுள்ளது. இதன்படி, ரசாயனம், வேளாண் பொருட்கள், மருந்துகள், அலுமினியம், ஸ்டீல், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான கட்டணம் குறைக்கப்படுகிறது. இந்தக் கட்டணக் குறைப்பு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. சர்வதேச அளவில் வர்த்தக உறவுகளில் ஒருதலைப்பட்ச மற்றும் வர்த்தக பாதுகாப்புவாதம் அதிகரித்து வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சீன அரசுக்குச் சொந்தமான சீனா டெய்லி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 2,323 பிரிவுகளின் கீழ் சுமார் 8,549 பொருட்களுக்கான கட்டணத்தை சீனா குறைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக