மருத்துவக் கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் இணையதளம் இரண்டு நாள்களாக முடங்கியுள்ளதால் மாணவர்கள் அவதியுற்றனர்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட அரை மணி நேரத்தில் www.tnmedicalselection.org என்ற மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்திலும் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இணையதளம் சரியாகச் செயல்படவில்லை.
அதன் காரணமாக தரவரிசைப் பட்டியல் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் வெள்ளிக்கிழமையும் இணையதளம் செயல்படவில்லை.
இணையதளம் முடங்கியதால் மருத்துவக் கலந்தாய்வுக்கான அட்டவணையையும் வெளியிடவில்லை.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பில் சிறிது கோளாறு ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமையில் இருந்து நெட்வொர்க்கில் பிரச்னை உள்ளது.
அதனைச் சீராக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
*மன உளைச்சலில் மாணவர்கள்*
மருத்துவக் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது. ஆனால் இதுவரை கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியிலும் குழப்பம் நீடிக்கிறது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ கூறியது:
கலந்தாய்வு அட்டவணையை வெளியிடுவதற்கு முன்பு சட்ட ரீதியான கருத்து வாங்க வேண்டியுள்ளது. அதன் காரணமாகவே அட்டவணை வெளியிடப்படவில்லை.
எனினும் சனிக்கிழமை (ஜூன் 30) காலை கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக