நடிகர் விஜய்யின் “பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி அளித்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 19-ஆம் தேதி இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பாக அரசை விமர்சித்துப் பேசிய விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு வைத்தால் சுபஸ்ரீ மரணம் போன்ற சம்பவங்கள் நடக்காது எனக் கூறியிருந்தார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழக அமைச்சர்களும் இதற்கு பதிலளித்திருந்தனர்.
இந்த நிலையில், விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கல்வி நிறுவனத்தில் திரைப்பட விழாவுக்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கலை-அறிவியல் கல்லூரிக்கு, கல்லூரி கல்வி இயக்குநரகம் சார்பில் இதேபோன்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதிகாரிகள் ஆய்வும் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் கல்வித் துறை செயலர் எச்சரிக்கை:
அரசியல் ரீதியில் கருத்துகளை வெளிபடுத்தக்கூடிய விழாக்களுக்கு அனுமதி அளிக்கும் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என உயர் கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா எச்சரித்துள்ளார்
.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர் கல்வித் துறை செயலரிடம், “பிகில்’ ஆடியோ நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், சம்பந்தப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரிக்கு பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து தொடர்வது சந்தேகம்தான்.
இதுபோன்ற விழாக்களுக்கு எந்தவொரு உயர் கல்வி நிறுவனமும் அனுமதி அளிக்கக் கூடாது.
சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் அனுமதி அளிக்கலாம்.
ஆனால், அரசியல் ரீதியில் கருத்துகளை வெளிப்படுத்தக்கூடிய விழாக்களுக்கு அல்லது நிகழ்ச்சிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் அனுமதி அளிக்கக்கூடாது.
மீறி அனுமதித்தால், அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு இணைப்பு அந்தஸ்து ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates