மக்களவையில் நேற்று (மார்ச் 12) திடீரென பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியைச் சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. ஆனால், பாஜகவின் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்தபோதும், அவருடன் ஒரு வார்த்தை கூட ராகுல் பேசவில்லை.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, கடந்த 5ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஆனால், எதிர்கட்சிகளின் அமளியால் கடந்த வாரம் முழுவதும் மக்களவையும் மாநிலங்களவையும் பல முறை முடங்கியது. இந்த நிலையில், நேற்று மக்களவை கூட்டம் தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாக அவைக்கு வந்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
வழக்கம்போல, பதினோரு மணிக்கு முன்னதாகவே வந்து அவையின் முன்வரிசையில் அமர்ந்திருந்தார் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லால் கிருஷ்ண அத்வானி. அவர் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்ட ராகுல், அவர் இருக்குமிடம் நோக்கிச் சென்றார். அவரது கைகளைப் பற்றி நலம் விசாரித்தார். அதற்கு, “நான் நலமாக இருக்கிறேன். ஆனால், அவைதான் நலமாக இல்லை” என்று பதிலளித்தார் அத்வானி.
மேலும், முதன்முறையாக நாடாளுமன்றத்தின் முடக்கத்தை பிரதமராலோ, சபாநாயகராலோ, எதிர்கட்சியினாலோ சரிசெய்ய முடியாமல் இருப்பதைக் காண்பதாகக் குறிப்பிட்டார் அத்வானி. சில நிமிடங்கள் அத்வானியிடம் பேசியபின்பு, தனது இடத்திற்குச் சென்று அமர்ந்து கொண்டார் ராகுல்.
ஒரு மணி நேரம் கழித்து, இந்த அவை நாகரிகத்திற்கு எதிரான ஒரு நிகழ்வும் நடந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டபோது, ராகுல் உடனே எழுந்து வெளியேறினார். அப்போது, அவரைக் கடந்து சென்றார் பாஜகவின் தலைவர் அமித் ஷா. இருவருமே ஒருவரையொருவர் பார்க்காதது போல, சிறு புன்னகையையோ, வணக்கத்தையோ கூட தெரிவிக்காமல் கடந்து சென்றனர்.
கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போதும், ராகுலின் கைபிடித்து நடந்து வந்தார் அத்வானி. ஆனால், அங்கிருந்த நரேந்திர மோடியையோ, அமித் ஷாவையோ ராகுல் நலம் விசாரிக்கவில்லை.
வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்ற அத்வானியின் சகாக்களில் சுஷ்மா ஸ்வராஜ் தவிர வேறு யாரும் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா போன்ற மூத்த தலைவர்கள் தற்போது கட்சி நடவடிக்கைகளில் அதிகம் பங்குகொள்வதில்லை. இந்த நிலையில் மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்ற கூட்டங்களிலும், பாஜக கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார் அத்வானி. ஆனால், அவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற கருத்து பரவலாக விவாதிக்கப்படுகிறது.
கடந்த வாரம் திரிபுராவில் நடந்த பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழாவில், அத்வானி வணக்கம் தெரிவித்ததைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார் பிரதமர் மோடி. இது, சமூக வலைதளங்களில் பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக